ஒன்பது தமிழ்க் கட்சிகள் புளொட் அலுவலகத்தில் சந்திப்பு // மல்வத்த பீடாதிபதியும், தலதா மாளிகையின் தியவதன நிலமேயும் வவுனியாவுக்க விஜயம்..!

ஒன்பது தமிழ்க் கட்சிகள் புளொட் அலுவலகத்தில் சந்திப்பு..!

ஒன்பது தமிழ் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் அரங்கம் நேற்று புளொட் அலுவலகத்தில் கூடி ஆராய்ந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப் பினையும் தமிழ் கட்சிகள் அரங்கத்தில் இணைத்துக் கொள்வதற்காக ஒன்பது கட்சிகளினதும் பிரதிநிதிகள் கையெழுத்திட்ட கடிதமொன்றை கூட்டமைப்புக்கு அனுப்பி வைப்பது குறித்து இச்சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டதாக முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். புளொட் அலுவலகத்தில் நேற்று நண்பகல் ஒரு மணியளவில் ஆரம்பமான இச்சந்திப்பு சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை நீடித்தது. உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பிவைப்பது மாத்திரமன்றி கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பி. நாடு திரும்பியதும் தமிழ் கட்சிகள் அரங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் அவரை நேரில் சந்தித்து கடிதத்தின் பிரதியொன்றை அவரிடம் நேரடியாக கையளிப்பதற்கு முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார். தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சிவாஜிலிங்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலர் சிறீதரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சந்திரகாந்தன், ஈழ எதிரிகள் மறு வாழ்வுக் கழகத்தின் தலைவர் செ. சந்திரஹாசன், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி. ஆனந்தசங்கரி, ஈபி.டி.பி. அமைப்பின் தலைவர் டக்ளஸ் தேவாநந்தா, புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அமைப்பின் பொதுச்செயலர் தி.சிறீதரன் , ஸ்ரீ  டெலோ அமைப்பின் தலைவர் உதயராசா ஆகியோர் ஒன்பது பேரும் கையொப்பமிட்ட உத்தியோகபூர்வ கடிதமே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட விருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் வடக்கு, கிழக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு பொதுவான தீர்வு எடுப்பது குறித்து ஆராயப்பட்டிருப்பதுடன் அடுத்த கூட்டத்தை எதிர்வரும் 14ம் திகதி மட்டக்களப்பில் காலை 10மணிக்கு நடத்துவதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மல்வத்த பீடாதிபதியும், தலதா மாளிகையின் தியவதன நிலமேயும் வவுனியாவுக்க விஜயம்..!

மல்வத்த பீடாதிபதியும், தலதா மாளிகையின் தியவதன நிலமேயும், நேற்று 28ம் திகதி வவுனியாவுக்கு விஜயம் செய்துள்ளனர். மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே சிறீ சுமங்கல மகாநாயக்க தேரரும், தியவதன நிலமே நிலங்கதால பண்டாரவும் வவுனியா நகரில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொள்வதற்காக வவுனியாவுக்கு சென்றிருந்தனர். வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில் இப்பிரதேசத்தில் வாழுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கினார்கள். இந்த வைபவத்தில் கண்டி, வவுனியா அரச அதிபர்கள் வன்னி பிராந்திய பாதுகாப்பு படைகளில் கட்டளைத்தளபதி மேஜர்ஜெனரல் கமல் குணரட்ண உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <blockquote cite=""> <code> <em> <strong>