சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 24மணிநேர சேவைக்கு 1750அழைப்புகள் // நாட்டையும் கட்சியையும் பாதுகாத்து நாட்டு மக்களின் எதிர்காலத்தை சுபீட்சமாக்குவதே சிறீமாவோ பண்டாரநாயக்கவிற்கு நாம் செய்யும் கௌரவமாகும்-ஜனாதிபதி..!

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 24மணிநேர சேவைக்கு 1750அழைப்புகள்..!

சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல் வழங்குவதற்கான 24 மணிநேர தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நேரடி தொலைபேசிக்கு நாடளாவிய ரீதியில் இருந்து இதுவரை 1750 அழைப்புகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி அனோமா திசாநாயக்க தெரிவித்துள்ளார். சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்களை வழங்குவதற்கான இந்த நேரடி தொலைபேசி கடந்த 22ம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது. 1929 என்ற எண்ணில் 24 மணிநேரமும் இலவசமாக எவரும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்களை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தெரிவிக்க முடியும். கடந்த ஒருவார காலத்தில் 1750 தகவல்கள் அதிகாரசபையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலான தகவல்கள் தனியார் மற்றும் அரசாங்க பாடசாலைகளில் சிறுவர்கள் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுதல் தொடர்பாகவே இருந்துள்ளன. இவ்வாறு செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு பொலிஸாரின் உதவியை பொலிஸ் மா அதிபரிடம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி கேட்டுள்ளார். முறைப்பாடுகள் மட்டுமன்றி சிறுவர் விடயங்கள் தொடர்பான ஆலோசனைகளையும் மேற்கூறிய தொலைபேசி எண்களை அழைப்பதன்மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

நாட்டையும் கட்சியையும் பாதுகாத்து நாட்டு மக்களின் எதிர்காலத்தை சுபீட்சமாக்குவதே சிறீமாவோ பண்டாரநாயக்கவிற்கு நாம் செய்யும் கௌரவமாகும்-ஜனாதிபதி..!

நாட்டையும் கட்சியையும் பாதுகாத்து நாட்டு மக்களின் எதிர்காலத்தை சுபீட்சமாக்குவதே சிறீமாவோ பண்டாரநாயக்கவிற்கு நாம் செய்யும் கௌரவமாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சகலதையும் சவாலாக ஏற்று நாட்டையும் நாட்டின் வளங்களையும் பாதுகாத்தவர் முன்னாள் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்க. அதனைக் கொள்கையாகக் கொண்டே அரசாங்கமும் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சிறீமாவோ பண்டாரநாயக்க பிரதமராகப் பதவியேற்ற ஐம்பதாவது ஞாபகார்த்த நிகழ்வு அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவிக்கையில், 50 வருடங்களுக்கு முன் ஸ்ரீமாவோ இந்த நாட்டின் பிரதமராகவும் உலகின் முதலாவது பெண் பிரதமராகவும் திகழ்ந்தார். எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க சிறீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தார். அக்கட்சியைப் பாதுகாத்து பலப்படுத்தியது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவே. அந்த மகத்தான சேவையை என்றும் மறக்க முடியாது. அவரது காலத்தில் அரச வளங்கள் பாதுகாக்கப்பட்டன. எமக்கான கோதுமை மா நிறுத்தப்பட்ட போதும் அவர் தாம் கொண்ட கொள்கையில் உறுதியாகவிருந்து அதற்கெதிராகப் போராடினார். இதனை முன்னுதாரணமாகக் கொண்டே நாமும் செயற்படுகிறோம். முழு உலகிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியபோதும் அதனை எதிர்கொள்ளும் பலம் அவருக்கிருந்தது. அந்தப் பலமே எமக்கும் முன்னுதாரணமாகியது. நாட்டின் தனித்துவத்தைப் பாதுகாக்க அவர் எப்போதும் தயாராகவே இருந்தார். அரச வளங்கள் எதனையும் அவர் விற்கவில்லை. காப்புறுதிக் கூட்டுத்தாபனம், வங்கிகள் போன்றவற்றை பாதுகாத்ததுடன் பூகொட, துல்கிரிய, டயர் கூட்டுத்தாபனம் ஆகியன அவரது காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டன. கட்சிக்காக, நாட்டுக்காக அவர் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராகவிருந்தார். தமது கட்சியின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது போன்று ஏனைய கட்சிகளின் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்பதை அவர் வலியுறுத்தினார். இளைய பாராளுமன்ற உறுப்பினராக நான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு உறுதுணையாக அவர் இருந்தார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியை, அவரை முன்னுதாரணமாகக் கொண்டு நாம் செயற்பட்டு வருகிறோம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <blockquote cite=""> <code> <em> <strong>