யாழ். வாக்காளர்களை பதிவுசெய்வது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கமளிப்பு // றுகுணு பல்கலை மாணவன் கொலை விடயமாக மனித உரிமைக்குழுவிடம் புகார்..!
யாழ். வாக்காளர்களை பதிவுசெய்வது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கமளிப்பு..!
யாழ். குடாநாட்டில் வாக்காளர்களைப் பதிவுசெய்வது தொடர்பாக பிரதேசமட்ட ரீதியில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கைகளை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்றுமுதல் ஆரம்பித்துள்ளனர். இவர்களது இச்செயற்பாட்டுக்கு மனித உரிமைகள் இல்லம் வாகன உதவி மற்றும் ஏனைய உதவிகளை வழங்கியுள்ளது. வாக்காளர் பதிவுகள் தொடர்பாகக் கிராமரீதியில் போதிய விளக்கம் இன்மையால் அவர்கள் இதில் பெரும்நாட்டம் காட்டவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இச்செயற்பாடில் ஈடுபடவுள்ளனர். மக்கள் வாக்காளர்களாகத் தம்மைப் பதிவு செய்யாதவிடத்து பாரிய விளைவுகளை அவர்கள் எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். இது தொடர்பான விளக்கம் இன்மையே மக்கள் தம்மை வாக்காளர்களாகப் பதிவு செய்யாமைக்குக் காரணம். மக்கள் தம்மை வாக்காளர்களாகப் பதிவுசெய்யாது விட்டால் பல்கலைக்கழகத் தெரிவு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவு, நிதியொதுக்கீடு, தொழில் வாய்ப்புப் பெறுதல், அரச உத்தியோகத்தர் நியமனம் போன்ற பல்வேறு சிக்கல் எதிர்நோக்க வேண்டிவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
றுகுணு பல்கலை மாணவன் கொலை விடயமாக மனித உரிமைக்குழுவிடம் புகார்..!
மாத்தறை றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மரணம் மற்றும் 8 மாணவர்கள் கைது செய்யப்பட்டமை ஆகியன தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் புகார்தெரிவித்துள்ளது. சுசந்த பண்டாரவின் மரணம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடைபெறுவதை உறுதிப்படுத்தவதற்காக எந்த நடவடிக்கையையும் தாம் மேற்கொள்ளவுள்ளதாக மேற்படி ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரட்ண தெரிவித்துள்ளார். சுசந்த பண்டார இயற்கையாக இறந்ததாக பொலிஸார் முதலில் தெரிவித்தனர். எனினும் மற்றொரு மாணவனின் தாக்குதலால் அவர் மரணமடைந்ததாக பொலிஸார் பின்னர் கூறியுள்ளனர்.
உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்