மருதமடு முன்னாள் புலி உறுப்பினர்கள் உள்ள புனர்வாழ்வு முகாமில் கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு // யாழில் நாட்டைவிட்டு வெளியேறியோரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கத் தீர்மானம்..!
மருதமடு முன்னாள் புலி உறுப்பினர்கள் உள்ள புனர்வாழ்வு முகாமில் கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு..!
மன்னார் மருதமடு புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தம்மிடம் இரகசியமான முறையில் மறைத்து வைத்திருந்த 17 கையடக்க தொலைபேசிகள் உட்பட பல உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபாய மெதவல தெரிவித்துள்ளார். சில கையடக்க தொலைபேசிகளை அவர்கள் தமக்கு தேவையான நேரத்தில் பயன்படுத்திய பின்னர் புதைத்து வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய புலிகளின் சந்தேகநபர்கள் வெளிநாடுகளுக்கு அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் இவர்கள் தமது சர்வதேச வலையமைப்பினருக்கு தகவல்களை வழங்கியிருக்கலாம் எனவும் பாதுகாப்புத் தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தொலைபேசிகளில் எடுக்கப்பட்ட அழைப்புகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கையடக்க தொலைபேசிகளுடன் 14சிம் அட்டைகள், 30பற்றரிகள் மற்றும் 21சார்ஜர்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் மெதவல குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மருதமடு முகாமில் கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றபட்டுள்ளமை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் இந்த முகாமில் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 500 பேருக்கு புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் சுதந்த ரணசிங்க கூறியுள்ளார்.
யாழில் நாட்டைவிட்டு வெளியேறியோரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கத் தீர்மானம்..!
யாழ். மாவட்டத்தில் வாக்காளர்களாகப் பதியப்பட்டு, யுத்தம் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியவர்களின் பெயர்களை 2010 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது. 2008ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின்படி, யாழ். மாவட்டத்தில் 720,000பேர் வாக்காளர்களாக இருந்தனர். 2009ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இந்த எண்ணிக்கை 816,000 ஆக உயர்ந்திருந்தது. எனினும் இப்பட்டியலிலுள்ளோரில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் வசிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி வாக்காளர்களில் தற்போது உண்மையாக யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 400,000 ஆக இருக்கலாம் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது. இது தொடர்பான சரியான எண்ணிக்கையை தேர்தல் அதிகாரிகள் விரைவில் கண்டறிவர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆரச்சி டெய்லி மிரருக்குத் தெரிவித்துள்ளார். வடக்கிலுள்ள மக்கள் மத்தியில் வாக்காளர்களாக தம்மை பதிவு செய்வதில் ஆர்வமில்லை எனவும் இது தொர்பாக அரசியல் கட்சிகளும் காத்திரமாகப் பங்காற்றவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். புதிய இடங்களில் குடியேறிய மக்கள், தமது பழைய இடங்களிலுள்ள காணிகள் பறிபோய்விடும் என்ற அச்சம் காரணமாக வாக்காளர்களாக பதிவு செய்யத் தயங்குகின்றனர் எனவும் ரோஹன ஹெட்டிஆரச்சி தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்