வட பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்கு சீன பாதுகாப்புத் துறையினர் ஒத்துழைப்பு // வன்னியில் நீண்டகாலம் பணியாற்றிய ஆசிரியர்கள் இடமாற்றம்..!
வட பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்கு சீன பாதுகாப்புத் துறையினர் ஒத்துழைப்பு..!
இலங்கையின் வட பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்கு சீன பாதுகாப்புத் துறையினர் ஒத்துழைப்பு வழங்க இணங்கியுள்ளனர். வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளை சீன அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, ஆலோசனை வழங்க உள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி ஸெஹ் சீ, இராணுவக் கேணல்கள், லெப்டினன்கள், மேஜர்கள் உள்ளிட்ட உயர் இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் போன்ற பிரதேசங்களுக்கு குறித்த குழுவினர் விஜயங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிலக்கண்ணிவெடி அகற்றும் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது, எவ்வாறு திட்டங்களை முன்னெடுப்பது போன்றவை குறித்து சீன அதிகாரிகள் விளக்கமளிக்கவுள்ளனர். நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளில் பயன்படுத்தப்படும் அநேகமான கருவிகள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
வன்னியில் நீண்டகாலம் பணியாற்றிய ஆசிரியர்கள் இடமாற்றம்..!
வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள பாடசாலைகளில் நீண்டகாலம் கடமையாற்றிய ஆசிரியர்களில் 232பேர் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்படும் அதேநேரம் யாழ்.மாவட்டம் உட்பட வெளிமாவட்டங்களிலிருந்து 560 ஆசிரியர்கள் வன்னிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இவர்களின் பெயர்ப்பட்டியல் வடக்கு மாகாணக் கல்வித்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. பாடசாலை மூன்றாம் தவணைத் தொடக்க முதல்நாள் இவர்கள் புதிய பாட சாலைகளில் கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவுள்ளனர். இவ்வாறு வடக்குமாகாண கல்விப்ப ணிப்பாளர் வீ.இராசையா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தகவல் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களில் இருந்தும் வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்தும் 560 ஆசிரியர்கள் 3 வருடம் கடமைபுரிய வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் மடு கல்வி வலயம், வவுனியா வடக்கு வலயம் ஆகியவற்றுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா வடக்கு வலயத்தின் ஒருபகுதி, மடு கல்வி வலயம் ஆகியவற்றில் இருந்து 232 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பட்டியல் சம்பந்தப்பட்ட வலயக்கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பொருத்தமான பாடசாலைகளை வலயக் கல்விப்பணிப்பாளர்கள் வழங்குவார்கள். சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தற்பொழுது கடமைபுரியும் மாவட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக சம் பந்தப்பட்டவர்களுக்கு தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து வன்னிப் பெருநிலப்பரப்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மூன்று வருடங்களுக்கு மட்டும் சம்பந்தப்பட்ட பாடசாலையில் கடமைபுரிய வேண்டும் என்று காலம் குறிப்பிட்டே இடமாற்றக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. மூன்று வருடங்கள் முடிவடைந்ததும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் விரும்பிய இடங்களுக்கு பணியாற்ற அனுமதிக்கப்படுவர். சகல ஆசிரியர்களும் மேற்படி இடமாற்ற வேலைத்திட்டத்துக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் தமது பங்களிப்பை வழங்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்