ஜனாதிபதி நாடு திரும்பியதும் சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்வார்..! // இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தில் இலங்கையின் 62வது சுதந்திரதின நிகழ்வுகள்- (புகைப்படங்கள் இணைப்பு)
மூன்றுநாள் விஜயத்தை மேற்கொண்டு ரஷ்யாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடுதிரும்பியதும் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது. அவர் நாளைமறுதினம் அல்லது வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது கடந்த 26ம்திகதி நடத்தப்பட்ட ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினார் இதனையடுத்து தனது இரண்டாவது தவணைக்காலம் எப்போது ஆரம்பமாகி நிறைவு பெறுகிறது என்பது தொடர்பிலான ஆலோசனைகளை வழங்குமாறு உயர் நீதிமன்றத்திடம் எழுத்துமூலம் கோரியிருந்தார். அதுதொடர்பில் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான நீதியரசர்களான ஷிராணி பண்டாரநாயக்க பாலபெத்த பெந்தி, ஸ்ரீபவன், ஏக்கநாயக்க, சந்திரா ஏக்கநாயக்க, இமாம் ஆகிய ஏழு நீதியரசர்கள் கடந்த 1ம்திகதி திங்கட்கிழமை விரிவாக ஆராய்ந்தனர் இந்த ஆலோசனைகள் மறுநாள் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது அதன் பிரகாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலம் 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் திகதி ஆரம்பமாகிறது என்று தெரிவிக்கப்படுகிறது அதன்பிரகாரமே ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துக் கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் 62ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெனீவாவில் அமைந்துள்ள சுவிஸ்லாந்துக்கான இலங்கை தூதுவராலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (05.02.2010) சுதந்திரதின கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்தன. சுதந்திரதின நிகழ்வுகளின் போது தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் பெருமளவில் பங்கேற்றிருந்தனர். மூவினங்களையும் சேர்ந்த குழந்தைகள் குத்துவிளக்கேற்றி வைத்ததுடன், சர்வமதத் தலைவர்களின் ஆசீர்வாதங்களுடன் சுதந்திரதின நிகழ்வுகள் ஆரம்பமாகின. சுவிஸ்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் திருமதி.கேணுகா செனவிரத்ன இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை சுவிஸ்லாந்துக்கான இலங்கைத் தூதுவராலய முதலாவது செயலாளர் திரு.ஜவ்பர் தொகுத்து வழங்கினார். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம ஆகியோரின் சுதந்திர தினச் செய்திகளும் அங்கு வாசிக்கப்பட்டது. அவர்களின் சுதந்திரதினத் செய்திகள் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு உரைகளும் இடம்பெற்றதுடன், சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டு சுதந்திரதின நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன.
























உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்