பொன்சேகாவை கைது செய்வதற்கு அரசாங்கம் முயற்சி மேற்கொள்ளவில்லை -பாதுகாப்புச் செயலாளர் தெரிவிப்பு! // வவுனியா வடக்கில் மீள்குடியோர்க்கு 8900வீடுகள் அமைக்க ஏற்பாடு-
சரத்பொன்சேகாவை கைது செய்வதற்கான முயற்சிகள் எதனையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் வெளிநாட்டு இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் சரத்பொன்சேகா இராணுவத்தினருக்கு பிழையான உத்தரவுகளை பிறப்பித்தார் என்பதற்காகவும் அவர்மீது முன்வைக்கப்பட்டுள்ள பல குற்றச்சாட்டுகளுக்காகவும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். புலிகளுக்கு எதிராக போரிட்ட ஏராளமான இராணுவ தளபதிகள் இருக்கிறார்கள் இறுதி யுத்தத்தில் பங்கு பற்றினார் என்ற ஒரேகாரணத்திற்காக மாத்திரம் சரத்பொன்சேகாவுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை இலங்கை மீது ஐக்கிய நாடுகள் சபைக்கோ வேறு எந்த அமைப்புக்கோ யுத்த குற்றவிசாரணைகளை மேற்கொள்ள தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை இதுதொடர்பில் எவ்வித ஆதாரங்களும் இல்லாத காரணத்தினால் தைரியமாக அவ்வாறான விசாரணைக்கு அவசியம் இல்லை என கூறக்கூடியதாக இருக்கிறது. இதற்கிடையில் விடுதலைப்பலிகள் அழித்து ஒழிக்கப்பட்டு விட்டனர் இனி அவர்களால் மீள எழவோ மாற்று இயக்கங்களை உருவாக்கவோ முடியாது எனவே அவர்களால் யாருக்கும் ஆபத்து இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கில் மீள்குடியேற்றப்படுவோர்க்கென 8ஆயிரத்து 900வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவிருப்பதாக வவுனியா மாவட்ட அரசஅதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கமைய ஐரோப்பிய ஆணைக்குழு 3ஆயிரத்து 900 வீடுகளையும் உலக வங்கி 5ஆயிரம் வீடுகளையும் கட்டிக்கொடுக்க முன்வந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மீள்குடியேற்றப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை எதிர்வரும் 15ம் திகதிமுதல் வவுனியாவடக்கில் மீள்குடியேற்றப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வவுனியா நிவாரணக் கிராமங்களில் தற்போது சுமார் 75ஆயிரம் பேரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் சுமார் 20ஆயிரம் பேர்வரையிலுமே மீளக் குடியமர்த்தப்படவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிலக்கண்ணிவெடி அகற்றலில் ஏற்பட்ட தாமதத்தினால் சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீள்குடியேற்றப் பணிகள் கடந்த 02ம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளில் கட்டம்கட்டமாக மீள்குடியேற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 02ம் திகதி பூநகரிக்கு 1000பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை இன்று கிளிநொச்சி மாவட்டம் கரச்சி பிரதேசத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தங்கியிருக்கும் 300 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப் படவுள்ளனார் என்றும் அரசஅதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்