ஐ.ம.சு.முன்னணி வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகள் 15ம் திகதி பூர்த்தி! // ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களை தெரிவு செய்யும் கூட்டம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக அக்கட்சியின் தெரிவுக்குழு இன்றும் நாளையும் கூடவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வயம்ப, வடமத்திய, வடக்கு, கிழக்கு, மேற்கு, மத்திய, வட மாகாணங்களின் தேர்வுக்குழு இன்று கூடுமென்றும், சப்பிரகமுக மாகாண தேர்தல்குழு நாளை கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தலைமையில் மேல், மத்திய, ஊவா மாகாண தெரிவுக்குழுவும், அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தலைமையில் சப்பிரகமுவ குழுவும் கூடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இத்தெரிவுகளுக்காக மேன்முறையீடு பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் தலைமையில் குழுவால் மேற்கொள்ளப்படவுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவுசெய்யும் பணிகள் எதிர்வரும் 15ம் திகதியளவில் பூர்த்தி செய்யப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொதுச்செயலரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இம்முறை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள சகல கட்சிகளும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் கூட்டுக்கட்சிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்கள் கிடைத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடுவது குறித்து சகல கூட்டுக் கட்சிகளுடனும் பேசிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவுசெய்வதற்காக மூன்று வேட்பு மனுக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் இன்றும் (8) நாளையும் (9) கொழும்பு மகாவலி நிலையத்தில் இடம்பெற உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இந்த வாரத்தில் பூர்த்தி செய்யப்படும் எனவும் வேட்பாளர் தெரிவில் ஏதும் அநீதி இடம்பெற்றிருந்தால் பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள வேட்பு மனு மேன்முறையீட்டு குழுவிற்கு மேன்முறையீடு செய்யலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்