அரசாங்க வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைபெற வருகை தரும் நோயாளர்களுக்கு வசதிகள்! // கிண்ணியா பெரியாற்றுமுனை கண்கா ஆற்றுப்பகுதியிலிருந்து சடலம் மீட்பு! // வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக சென்று நாடு திரும்பியவர்கள் தொடர்பில் ஆய்வு!
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக சென்று நாடுதிரும்பியவர்கள் தொடர்பான ஆய்வொன்றினை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆரம்பித்திருப்பதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் விமானநிலையத்தினூடாக பெற்றுக் கொள்ளப்படுவதுடன் தகவல்களை பெறுவதற்காக பரவலான விளம்பரங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்குச் சென்று உழைப்பவர்கள் பலர் சொந்த நாட்டுக்கு திரும்பியதும் குறித்த இலக்கின்றி தமது பணத்தை வீண்விரயம் செய்கின்றனர். இதனால் அவர்கள் உழைக்கும் பணத்தை சிறப்பான முறையில் எப்படி முகாமைத்துவம் செய்யலாம், எந்தத்துறைகளில் அதனை முதலீடு செய்வதன்மூலம் அதனை பலமடங்கு பெருக்கலாம் போன்ற ஆலோசனைகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன. நாட்டுக்கு திரும்பியவர்கள் மீண்டும் வெளிநாட்டுக்குச் செல்ல விரும்பின், அவர்கள் எவ்வாறான வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென்பது குறித்த அறிவுரைகளும் இதன்மூலம் எடுத்துரைக்கப்படவுள்ளன. எனவே வெளிநாடு சென்று திரும்பியவர்களுக்கு இந்த ஆய்வு பேருதவியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.
திருமலை கிண்ணியா பெரியாற்றுமுனை கண்கா ஆற்றுப் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை இளைஞர் ஒருவரின் சடலம் பெரியாற்றுமுனை கண்கா ஆற்றுப் பகுதயில் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் அதுபற்றி பொலீசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து சடலத்தைப் பொலீசார் மீட்டதுடன் அது பாறூக் நிபுல்ல (வயது 21) என்பவருடைய சடலமென அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கிண்ணியா பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆய்வுகூட வசதியில்லாத அரசாங்க வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைபெற வருகைதரும் நோயாளர்களின் சிறுநீர் மற்றும் இரத்த மாதிரிகளை உடனுக்குடன் தனியார் ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளுவதற்கு சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இதன்நிமித்தம் ஆய்வுகூட வசதியைக் கொண்டிராத வைத்தியசாலைகளுக்கு நிதியொதுக்கீடுகளை வழங்கவும் அமைச்சு முடிவு செய்துள்ளது. சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் ஆலோசனைக்கு அமைய இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தற்போது ஆய்வுகூட வசதி இல்லாத ஆஸ்பத்திரிகளுக்குச் சிகிச்சைபெற வருகைதரும் நோயாளர்கள் ஒன்றில் ஆய்வுகூட வசதியைக் கொண்ட வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இல்லாவிடில் நோயாளரிடமிருந்து பெறப்படும் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் ஆய்வுகூட வசதியைக் கொண்டிருக்கும் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப ப்பட்டு அறிக்கைகள் பெறப்படுகின்றன. இந்நடவடிக்கைகளின் மூலம் நோயாளர்களுக்கு சிறந்த சுகாதாரசேவை கிடைப்பதில் தாமதங்கள் ஏற்படுகின்றன. இத்தாமதங்களை நிவர்த்திசெய்யும் வகையிலேயே அமைச்சர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இதன்பின்னர் ஆய்வுகூட வசதியில்லாத ஆஸ்பத்திரிகளுக்குச் சிகிச்சைபெற வருகைதரும் நோயாளர்களின் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளை உடனுக்குடன் தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொண்டு சிகிச்சையளிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்