படையினரின் ஊதியங்களையும் ஏனைய கொடுப்பனவுகளையும் மேலும் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்! // ஜனாதிபதி ரஸ்யாவில் 300மில்லியன் டொலர் ஆயுதக் கொள்வனவு! // இடம்பெயர்ந்தோர் வாழும் பகுதிகளிலேயே வாக்களிக்க முடியும்-
ஜனாதிபதியாக இரண்டாவது முறையும் தேர்தெடுக்கப்பட்ட பிறகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தனது அதிகாரபூர்வமான முதல் பயணமாக ரஷ்யா சென்றுள்ள நிலையில், அவர் இந்த பயணத்தின்போது 300 மில்லியன் டொலர்கள் அளவுக்கு ஆயுதக் கொள்வனவுகள் செய்யும் நோக்கில் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளத்தாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டில் நடைபெற்ற யுத்தம் முடிவடைந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இந்த அளவுக்கு ஆயுதக் கொள்வனவு எதற்கு என பலதரப்பிலும் கேள்விகள் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பாதுகாப்பு படையினரின் ஊதியங்களையும் ஏனைய கொடுப்பனவுகளையும் மேலும் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஆளும்கட்சியின் பிரதம அமைப்பாளரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன கடந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை வேரோடு களைய முற்படையினர் செய்த அர்ப்பணிப்பு ஒருநாளும் மறக்க முடியாதெனவும், அவர்களது நலனுக்காக அரசாங்கம் இயன்றவரை உதவி வழங்குமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்து நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்து வருபவர்கள் தற்போது தாங்கள் வாழும் பகுதிகளில் இருந்தே தங்களின் வாக்குகளை அளிக்க முடியும். இத்தகையோர்க்கு இலவசமாக உதவும் நடவடிக்கையை கொழும்பில் பொதுத் தரப்பொன்று முன்னெடுத்து வருகின்றது. இவ்விவகாரம் தொடர்பில் அத்தரப்பினர் வெளியிட்டுள்ள பகிரங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இடம்பெயர்ந்து வாழும் வடபகுதி வாக்காளர்களுக்கு, நீங்கள் இடம்பெயர்ந்து நாட்டில் ஏனைய பகுதிகளில் வாழ்ந்து வருபவராக இருப்பினும், தற்போது நீங்கள் வாழும் பகுதிகளில் இருந்தே உங்கள் வாக்குளை செலுத்தும் உரிமை உங்களுக்குண்டு. இது சம்பந்தமான ஏற்பாடுகளை நாம் உங்களுக்கு இலவசமாக ஒழுங்கு செய்து தரவுள்ளோம். எனவே கீழ்காணும் முகவரியுடன் நேரடியாகவோ அல்லது கடிதம் மூலமோ தொடர்பு கொண்டு இவ்விடயத்திற்கு தீர்வு காண வேண்டுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருமாள் பூமிநாதன், 143ன் கீழ் 03, கியூவீதி, கொழும்பு-02, தொலைபேசி இலக்கங்கள், 0113134658, 0786465727 ஆகும்.
உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்