குருநாகல் பாடசாலை உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் விசமிகளால் தீவைப்பு! // காலியில் வீட்டில் தனிமையில் வசித்தவர் படுகொலை! // சிசுவின் சடலம் பம்பலப்பிட்டியில் மீட்பு!
காலி மாவட்டம் ஊருகல்மங்கந்திய பொலிஸ் வலயத்திற்குட்பட்ட கல்பொத்தாவல பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த 54வயதான பெண்ணொருவர் கோரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் வீட்டின் சமையல் அறைக்குள்ளிருந்து மீட்கப்பட்டதாக ஊருகஸ்மங்கந்திய பொலீசார் தெரிவித்துள்ளனர். இவர் வங்கிக் கிளையொன்றில் உதவியாளராக பணிபுரிபவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்தததும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களுடனும், கைரேகை நிபுணர்களுடனும் சென்ற பொலீசார் தீவிர பரிசோதனைகளை நடத்தியுள்ளனர். நீதவான் விசாரணைகளைத் தொடர்ந்து சடலத்தை கராப்பிட்டிய வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
குருநாகல் மாவட்டம் ரத்கல்ல கனிஷ்ட வித்தியாலயத்தின் உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் போன்ற பெருந்தொகையான பொருட்கள் கடந்த 03ம்திகதி இனந்தெரியாதவர்களால் தீயிடப்பட்டதால் அவை முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளன என்று குருநாகல் பொலீசார் தெரிவித்துள்ளனர். பாடசாலையின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட பிளாஸ்ரிக் கதிரை 150மற்றும் விளையாட்டுப் பொருட்களுமே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளன. இந்தப் பொருட்கள் குருநாகல் பிரதேச சபையின் ஜே.வி.பி உறுப்பினர் தர்மபிரிய திசாநாயக்கவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாடசாலைக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கண்டுபிடிக்க குருநாகல் பொலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படும் சிசுவின் சடலமொன்று கொழும்பு, பம்பலப்பிட்டி ரிஜ்வே வீதியின் பாழடைந்த பகுதியொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதென பம்பலப்பிட்டிய பொலீசார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் அவசர அழைப்புக்குக் கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்புக்கமைய மீட்கப்பட்ட இப்பெண் சிசுவின் சடலம் அழுகிய நிலையில் இருந்ததென்று பொலீசார் தெரிவித்துள்ளனர். பிறந்த உடன் இச்சிசு கொலை செய்யப்பட்டிருக்கலாமெனவும், மேலதிக விசாரணைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் பொலீசார் மேலும் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு கல்கிசை மேலதிக நீதவான் ருச்சிர வெலிவத்த விஜயம் செய்து விசாரணை மேற்கொண்ட பின் சடலத்தை அரச செலவில் புதைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்